Wednesday, 9 November 2011

அறநெறியே இறைவழிபாடு



நீலகிரி உயிர்க்கோள இயற்கைப் பூங்கா
அறநெறியே இறைவழிபாடு

நமக்கு அப்பால் ஒரு சக்தி இருக்கிறது. அது தான் இயற்கை என்று அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். அதற்கு மதவாதிகள் கடவுள் என்று பெயர் வைத்துள்ளார்கள். அதே போல் இந்தப் பிரபஞ்சத்தை எடுத்துக் கொண்டால், இந்த உலகம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் மைல் தன்னைத் தானே ஒரு சுற்றுச் சுற்றி வருகிறது. சூரியனைச் சுற்றி வரும் பாதையிலே ஒரு நாளைக்குப் பதினையிந்து இலட்சத்து ஐம்பது ஆயிரம் மைல் ஓடுகிறது.

இதில் ஏதாவது தாமதம் இருக்குமா? இல்லை தடம் மாறுகிறதா? அவ்வளவு நேர் நிர்வாகமாகச்சிறிதும் பிறழாமல் எந்தப் பெரிய ஆற்றல்  நிர்வாகம் நடக்கிறது என்று பார்த்தால், அத்தகைய பெரிய நிர்வாக ஆற்றல் பிரபஞ்சத்தில் எல்லாம் வல்ல இறைவெளியின் அழுத்தம் என்ற உந்து ஆற்றலால் தான் நடக்கிறது. அதே போல் என் உள்ளத்திலே, உடலிலே நடக்கிறதும் அதே தான். உடலிலும் சரி, பிரபஞ்சத்திலும் சரி, அணுவிலும் சரி, அணுவைச் சுற்றிலும் சரி எங்கும் நிறைந்த ஆற்றலாக இருப்பது அந்த எல்லாம் வல்ல இறைவெளி ஒன்று தான்.

எனவே, அந்த அழுத்தமும், அதன் அறிவும் ஒன்றிணைந்த ஆற்றல் தான் நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அந்த செயலுக்குத் தக்க விளைவுகளைத் தந்து கொண்டே இருக்கிறது. கையைத் தட்டினால் ஒலி வருகிறது. அதே போன்று அதிகமாகச் சாப்பிட்டால் உடனே அசீரணம். அவ்வாறு எந்தச் செயல் செய்தாலும் தவறாகச் செய்தால் அது தவறு என்று உணர்ந்த உடனே துன்பம் உண்டாகிறது. சரியாகச் செய்தால் நாம் வாழ்க்கையை சீராக வாழ்ந்து கொண்டு வருகிறோம் என்று பொருள். தவறு செய்யாது இருக்க வேண்டும். தவறு செய்தால்  உடனே தண்டனை இருக்கிறது என்பதுதான் இறை ஆற்றல் உணர்த்தும் நீதி. அது கூர்தலறம் (Cause and effect system) இதைத் தெரிந்து கொள்ள இறையுணர்வு வேண்டும். தெரிந்து கொண்ட பிறகு மக்களோடு ஒற்றுமையாக வாழ்வதற்கு அறநெறி வேண்டும். அறநெறிதான் உண்மையில் இறை வழிபாடு.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Friday, 4 November 2011

இன்ப ஊற்று





இன்ப ஊற்று

என்னிடம் ஒரு முழுமையான ஆற்றலோடு எல்லாம் வல்ல இறைவன், என்னைப் படைத்திருக்கிறான். பக்திமானாக இருந்தாலும்,  ஞானவானாக இருந்தாலும் அவனுடைய பிரதிநிதியாகவே,  அவனடைய பகுதியாகவே தான் இருக்கிறேன். பேராற்றல் என்னிடம் அடங்கி இருக்கிறது. இதைக்கொண்டு என்னென்ன நலம் செய்து கொள்ள வேண்டுமோ அதை நானே விளைவித்துக் கொள்வேன்.

பிறருடைய உதவி தேவையான இடத்திலே அவர்களுக்கு உதவி செய்து அந்த உதவியை  நான் பெறுவேன்  என்ற அளவிலே உதவுபவர்களெல்லாம் நாம் பதில் செய்து கொண்டிருப்பேன் என்ற அளவிலே, கடமை உணர்வோடு நின்று பாருங்கள், பெரிய சக்திவாய்ந்த ஒரு ஆற்றல் உங்களிடம் பெருகி விடும். தினந்தோறும்  அதைப் பயன் படுத்துங்கள்.

நீங்கள் ஒரு அதிகாரியாக இருக்கலாம்.  உங்கள் அதிகாரத்தின் கீழ் ஆயிரமாயிரம் மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கக் கூடும். நீங்கள் இந்தப்புறம் திரும்பி நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணிவிட்டீர்களேயானால், அத்தனை ஆயிரம் மனிதர்களும் அவர்களின் தேவைகளும் நேரடியாக உங்களுக்குத் தெரியத் தொடங்கும். அதைச் செய்ய ஆரம்பித்தீர்களேயானால், அவ்வாறு செய்யச் செய்ய இன்ப ஊற்றுத் தான் மனதிலே வளரும். தெய்வத்தோடு தெய்வமாகவே நிற்கும் ஒரு நல்ல காட்சி உள்ளத்தில் ஏற்படும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, 3 November 2011

உண்மையான துறவு யாது?





உண்மையான துறவு யாது?

ஒரு அன்பர் கேட்டார்:  “எல்லாவற்றையும் துறந்தால் தான் ஞானம் வரும் என்று சொல்கிறார்களே!”  என்றார். சரி, துறந்து விட்டால், எங்கே போனீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. இந்த உலகத்தின் மேல்தான் இருக்கப் போகின்றீர்கள். பசி எடுத்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? உணவைத் தானே நாடவேண்டும்? அப்படியென்றால் எதைத் துறந்த தாக அர்த்தம்? இருக்கின்ற இல்லத்தை விட்டு இன்னொரு வீட்டுக்கோ விடுதிக்கோ சென்றால் என்ன மாற்றம்? இங்கு அதிகாரத்தோடு உணவு கேட்டதை விட்டு அங்கு பிறர் தயவை நாடிக் கையேந்தி வாங்க வேண்டியது தானே தவிர வேறு என்ன விளையும்? துறவு என்றால் அது அன்று.. அளவு முறை அறிந்து ஒழுகும் போது துறவு தானாக அமைந்து விடும்.

சாப்பிட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள், உணவு சுவையாக இருக்கிறது. ஆனால், உங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இது வரைக்கும் தான் உங்களால் ஜீரணிக்கச் செய்ய முடியும் என்று நன்றாகத் தெரிகிறது. அதைத் தெரிந்து கொண்டு இனிமேல் வேண்டாம் என்று சொல்லி விட்டு அங்கேயே  அதோடு நிறுத்தக் கூடிய அறிவும்,  செயலும் வந்து விட்டன என்றால் அதாவது  அறிந்த அறிவுக்கு செயல் ஒன்று பட்டால் அது தான் துறவு.  “அடுப்பிலே சாதம் வைக்கிறீர்கள், அல்லது சமையல் செய்கின்றீர்கள், வெந்து போன பிறகு ஏன் இறக்குகின்றீர்கள்?”  என்று கேட்டேன் . “சட்டியில் உள்ளது அடிபிடித்து விடும்.” “வேக வைக்கின்ற வரை, உறவு, இறக்குவது துறவு. இதற்கு மேல் போனால் கெட்டுவிடும் எனத் தெரியும் போது உடனே விடுதலை செய்து விட வேண்டும். அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். அளவு, அனுபவிக்க க்கூடிய முறை இந்த இரண்டு தெரிந்தால் அது தான் துறவு.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)