Friday, 23 November 2012

வேண்டல் வளம்.






வேண்டல் வளம்.

ஒவ்வொருவருடைய தேவையையும், விருப்பத்தையும் உணர்ந்து, எந்த இடத்தில் குறை இருக்கிறது, எந்த இடத்தில் நிறை இருக்கிறது என்பதையும் தெரிந்து கொண்டு உதவி செய்வது, வாழ்வதுதான் அன்பும் கருணையும். இதைத் தமிழில் வேண்டல் வளம் என்று சொல்வார்கள். வளம் என்றால் நம்மிடத்தில் இயற்கையாக உள்ள இருப்பு என்பதாகும். வேண்டல் என்றால் அவ்வப்பொழுது ஏற்படக் கூடிய தேவை என்ன என்பதாகும். இதே போன்று பிறரின் வேண்டல் வளம் தெறிந்து கொள்ள வேண்டும். அந்த வளத்தைப் பயன்படுத்துவும், வேண்டலைப் பூர்த்தி செய்யவும் உதவ வேண்டும் என்பதுதான் வேண்டல் வளம் தெரிந்த விளைவறிந்து வாழ்தல் என்பதாகும்.

இப்பொழுது அந்த வார்த்தை வழக்கில் வண்டவாளம் என்றாகி விட்டது. நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும், நம்மோடு இணைந்து உள்ளவர்களுக்கும் வேண்டல் வளம் தெரிந்து விட்டால், நான் எந்த அளவில் என்னுடைய வேண்டல் வளம் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு அவர்களின் மூலமாக என்ன பெற முடியும், அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை அறிந்தால், உயிர்களிடத்து அன்பும், கருணையுமாக இருக்கக் கற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் ஒவ்வொருவரும் அன்பையும், கருணையையும் எழுச்சி பெறச் செய்து, அதன் வழியே வாழ முற்படும் பொழுது எல்லா உயிர்களோடும் ஓர் இனிமை ஏற்படும் அல்லவா? அந்த இனிமை தான் வாழ்வில் முழுமை தரும், அறிவை உயர்த்தி வைக்கும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Thursday, 22 November 2012

குடும்ப நல வாழ்த்து.



 
குடும்ப நல வாழ்த்து.

ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம்.

வாழ்த்தும் போது தெய்வீக நிலையில், அமைதி நிலையில் இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்து விடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டுமென்றால், ‘அவர் அறியாமையினாலே தான் அவ்வாறு செய்தார், நம்முடைய கர்மச் சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது. எனவே அவர் செய்தார். அவருக்கு உள்ளாக  இயங்கிக் கொண்டிருபதும் எல்லாம் வல்ல முழுமுதற் பொருளே.

எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்’  என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து இயல்பாகி விட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.


------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்


----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday, 21 November 2012

நிறைசெல்வம்.





நிறைசெல்வம்.

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் ஆகியவற்றால் என்ன ஆகும் என்றால் நம்மைச் சுற்றி எத்தனை மக்கள் இருக்க்கிறார்களோ, நமக்குத் தொடர்புள்ள அவர்கள் உயிரோடு ஊடுருவி ஒரு நட்பை வளர்த்துக் கொள்ள முடியும். எத்தனை பேருடைய நட்பு நல்ல முறையிலே ஏற்பட்டுக் கொண்டிருக்குமோ, அந்த அளவுக்கு மனதிலே நிறைவு உண்டாகும். அதே போல் வெறுப்புணர்ச்சி கொள்கிறோம் என்றால், ஒவ்வொரு வெறுப்புணர்ச்சியும் ஒருவரைத் தள்ளி விட்டுக் கொண்டேயிருக்கும். அவர்கள் ஒதுங்கி விடுவார்கள். இப்படி ஒவ்வொருவராக நமக்குத் தெரிந்தவர்களோ, நெருங்கியவர்களோ ஒதுக்கிக் கொண்டே இருப்பார்களானால், முகமலர்ச்சி ஏற்படவே ஏற்படாது.

ஆகையினால், எப்பொழுதுமே நட்பை விருத்தி செய்து கொள்வதற்கு நம்முடைய செயலில், இவருக்கு என்ன நன்மை செய்ய முடியும், நமது ஆற்றலைக் கொண்டு, இன்முகம் காட்டி என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டே வரும்பொழுது, அதற்காக உங்களுடைய நன்மையை அல்லது இருப்பை அழித்துக் கொண்டு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு செய்தாலே போதும். நாம் ஒருவருக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்குமேயானால், அதுவே நல்ல படியாக அமையும். அந்த முறையில் எதிர் பார்ப்பதைத் தவிர்க்கலாம். இரண்டாவதாக, நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைத் தேர்தெடுத்து அப்படிச் செய்வதற்கு வேண்டிய ஆற்றலை எனென்ன முறையில் வைகுத்து, வளர்த்துக் கொள்ள முடியுமோ, அதை வளர்த்துக் கொள்ளும் போது நிறை செல்வம் இருக்கிற மாதிரி நமது மனநிலை வளர்ந்து கொண்டேயிருக்கும்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்


----------------------------------------------------------------------(தொடரும்)