Friday, 16 November 2012

நலமே காணும் பாங்கு.




நலமே காணும் பாங்கு.

நாமெல்லாம் அது கெட்டது, இது கெட்டது என்று நினைத்துக் கொண்டும், சொல்லிக் கொண்டும் இருக்கிறோம். சமுதாய மக்கள் உறவிலே, கணவன் மனைவி உறவிலே, நண்பர்கள் உறவிலே எந்தத் தொடர்பில் ஆகட்டும், கெட்டது ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு பத்துத் தடவை கெட்டது, கெட்டது என்று நினைத்தால், உள்ளத்தில் அவ்வளவும் கேடு என்ற முறையில் காந்த ஆற்றலைக் கொடுத்துவிடும். அதைவிட்டுவிட்டு, அவருக்கும் எனக்கும் உறவு ஏற்ப்பட்ட பிறகு, அவர் எனக்கு எத்தனை நன்மைகளைச் செய்தார் என்று எண்ணி எண்ணி, அதையே பல தடவை நினைத்து நினைத்து உள்ளத்தில் நிரப்பிக் கொண்டு வந்தால், ஒரு சிறு தவறு அல்லது எங்கேயோ ஒரு ஏமாற்றம் இருந்தால் கூடத் தெரியாது.

கணவன் மனைவி உறவிலே கூடத் திருமணத்தில் இருந்து இன்று வரை அந்த அம்மா செய்த நன்மைகள் எவை? என்று கணவன் எண்ணிப் பார்க்க வேண்டும். அதைப் போல, அவர் கணவன் அவளுக்குச் செய்த நன்மைகள் எவை? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி எண்ணிப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் நன்மையைத் தான் செய்திருப்போம். நன்மைகளின் எண்ணமே அழுத்தமான நினைவுகளாகும். அப்படி நன்மையையே, இனிமையான அனுபவங்களையே, பெருக்கிக் கொண்டால், ‘வெறுப்பு’ எனும் தீமை நுழைய இடமே இல்லை.

ஜீவகாந்த சக்தி தெய்வீகமானது. அதனை வெறுப்புணர்ச்சியால் களங்கப்படுத்தினால், பழிச்செயல்கள் பலவும் உருவாக அது வழி செய்து விடும். அதனை தூய்மையாக வைத்துக் கொள்வோம். நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ, அதே போன்ற தன்மை உடையதாக ஆகின்றது. வினைப்பதிவுகளின் கூட்டு மலர்ச்சியே மனிதன் என்ற தோற்றம். மனிதனுக்கு மனிதன் என்ன வித்தியாசம் என்றால் வினைப்பதிவினாலான அவன் தன்மைகள் தான்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

No comments:

Post a Comment