நமது ஐவகைக் கடமைகளில் கடைசியில் வரும் கடமையினை ஆற்றுவதில் முடிந்த வரையில் மிகுதியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பொருளிலோ, செல்வாக்கிலோ, உடல் கட்டிலோ போதிய வலிவு இல்லாத நாம் எப்படி உலக நலக் கடமையினை ஏற்று ஆற்ற முடியும் என்று எவரும் மலைக்கவோ, சோர்வுறவோ வேண்டாம்.
உங்களிடம் தவத்தால் உறுதி பெற்ற மனோ வலிவு இருக்கிறது. உலக நலத்திற்காக உங்கள் விருப்பத்தைச் சங்கற்பமாக்கிப் பல தடவை உங்களுக்குள் ஒலித்துக் கொள்ளுங்கள். சிதாகாசமாக இயங்கும் உங்கள் உயிராற்றலிருந்து கிளம்பும் அந்த உயர்ந்த நினைவு அலை மகாகாசம் என்ற பேரியக்கத் தொடர்கள் உயிரோடு கலந்து அந்த விருப்பம் நிறைவேற வழிவகுத்துக் கொள்ளும்.
உங்கள் கடமைகளில் ஒன்றாக நாள்தோறும் “வாழ்க வையகம்” என்ற மந்திரத்தைப் பத்து தடவையாகிலும் நமது உடன் பிறந்தவர்களாகிய மக்கள் அனைவரையும் விரிவாக நினைத்து ஒலித்துக் கொண்டு இருங்கள்.
அன்பர்கள் பலருடைய இத்தகைய எண்ண உறுதி செயல்படுத்துவதற்காக எந்த நாட்டிலோ, ஒரு வெற்றி வீரனைப் பிறக்கச் செய்யலாம். அல்லது இப்போது உள்ள உலக நல நாட்டம் கொண்ட ஒருவரையோ பலரையோ உலக நலத்தொண்டில் முழுமையாகத் திருப்பிவிடலாம். பேரியக்கத் தொடர் களத்தில் அத்தகைய மாபெரும் ஆற்றல் அடங்கி உள்ளது.
------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
----------------------------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment