கர்ப்பகாலப் பொறுப்புகள்.
குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன்-மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளின் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப் பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத் தனமாக நடந்து கொண்டாலும் உருவாகி வரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப் பெறும். செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும்.
மேலும் கர்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ,அளிக்கும் படி எவரும் நடந்து கொள்ளக்கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்த மாகி விடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்த பின் அதனை வளர்க்கும் முறையில், ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மனவளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.
நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால் எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.
----------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
----------------------------------------------------------------------(தொடரும்)
No comments:
Post a Comment