Saturday 29 December 2012

எல்லாம் நன்மையே





எல்லாம் நன்மையே.

துன்பத்தை மாத்திரம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தொல்லையாகவே இருந்திருக்கும். அது மாத்திரம் அன்று, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடக்கிறபோது காலத்தாலும், இடத்தாலும் வல்ல இறைநிலையானது ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கக் கூடிய அறிவுறை,  அனுபவ உரை, அனுபவ ஞானம், அப்படித் தான் எடுத்துக் கொள்ளவேண்டும்.  அப்படி எடுத்துக் கொண்டோமானால் எந்தத் துன்பத்துக்கும் காரணத்தைக் கண்டுபிடிக்கிற போது இதிலிருந்து விளையக் கூடிய நன்மையெல்லாம் விளுங்கி விடும். உண்மையில் எல்லாம் நன்மையாகத்தான் ஏற்படும்.

அப்படிப் பார்க்கின்ற போது துன்பம் வருகிறது என்று கவலைப் படுகின்றோமா, துன்பன் வரக்கூடாது என்று எண்ணுவதால் தான் அந்தக் கவலை, துன்பம் என்றால் மனதுக்கு ஒவ்வாதது அல்லது உடலில் நோய், இது இரண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இது எங்கே போகும்?  மனிதனிடம் தானே வர வேண்டும்.  இடம் கொடுக்க க்கூடிய மனிதனிடம்தானே வரும். என்னிடம் அந்தத் துன்பம் வந்தது என்றால் அதற்கு நான் இடம் கொடுத்து விட்டேன் என்று தானே பொருள். இப்போது அந்த இடத்தை நிரப்ப வேண்டும்.

நான் பிறந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாளைக்கு முடியப் போகிறேன். இதற்கு மத்தியில் எவ்வளவு இருந்த போதிலும் கூட, சீரணிக்கக் கூடிய அளவிற்கு மேல் சாப்பிடப் போவதில்லை, உடல் தாங்குகிற அளவுக்கு மேல் துணியைப் போடுவதில்லை, நின்றால் கால் அளவு, படுத்தால் உடலளவு, இதற்கு மேல் பூமியை அனுபவிக்கக் கூடியவர்களும் இல்லை. வரும்போது கொண்டு வருவதில்லை. போகும் போது கொண்டு போகப் போவதும் இல்லை. இந்த உண்மையை அப்படியே மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அப்போது நமக்கு எந்தெந்த இடத்திலே என்னென்ன கிடைக்கிறதோ, அது நிறைவாகத்தான் இருக்கும். வாழ்க்கையை ஒட்டிப் பார்த்தீர்களானால், எல்லோருக்கும் நிறைவாகத்தான் இருக்கிறது. இப்படியே உலகம் முழுக்கப் பார்த்தோமானால் எந்த இடத்திலும் யாருக்கும் குறைவே கிடையாது. குறைவு என்பது இல்லை.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)







Saturday 22 December 2012

வினையும் பயனும்.





வினையும் பயனும்.

நம் முன்னோர்கள் நல்லது கெட்டது என்பதைத் தீர்மானித்துச் சிலவற்றைச் செய்யலாம், சிலவற்றைச் செய்யக்கூடாது என்னும் முறையிலே அனுமதி கொடுத்தும், தடைவிதித்தும் வந்துள்ளார்கள். அவைகளெல்லாம் அந்தக் காலத்தை ஒட்டிய வாழ்க்கை முறைக்குப் பொறுத்தமாக இருந்திருக்கும். நாம் இன்னும் அதிகமாக, ஆழமாகப் போனால் அந்தக் காலத்தில், ‘இதைச் செய், அதைச் செய்யாதே’ என்று சொல்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டது ‘சொர்க்கம்’, நரகம்’ என்ற இரண்டு கற்பனைகளே. நல்லவை செய்தால் கடவுள் ஒருவனுக்கு நல்ல இடத்தைக் கொடுப்பான், தீயவை செய்தால் தண்டிப்பான் என்று ஆசைகாட்டியும், அச்சுருத்தியும் நல்லன செய்யவும், தீயன தடுக்கவும், வேண்டிய அளவிற்கு மக்களுக்குப் போதித்து வந்தார்கள். விஞ்ஞான அறிவு வளர்ச்சி பெற்று வரும் இந்தக் காலத்திலே அந்த முறை எவ்வளவு நாட்கள் தொடர்ந்து பயன்படும்?

இன்றைக்கு என்ன வேண்டுமென்றால், ‘ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு’ என்ற இயற்கையின் நியதியை (Law of Nature)
மனிதன் உணர்ந்து கொள்ளக் கூடிய அளவிற்கு சிறுவயதிலிருந்து படிப்படியாக விளக்கி அந்த உணர்வு ஒவ்வொருவருக்கும் வந்து விட வேண்டும். ‘இதைச் செய்தால் அதன் விளைவு இதுவாகத் தான் இருக்கும், அந்த விளைவைத் தாங்கிக் கொள்வதற்கு நான் தயாரா? என்ற அளவிற்கு ஒவ்வொருவரும் அவர்களைடைய செயலிலே விளைவாகத் தொக்கி நிற்கக்கூடிய ஒரு உண்மையை, இயற்கை அமைப்பை உணர்ந்து கொள்ளக்கூடிய முறையில் உள்ள கல்வி தான் இன்றைக்கு அவசியம், செயலிலேயே விளைவு இருக்கிறது என்பது தெளிவாகும்,  உறுதியாகவும் உணர்ந்து கொள்ளப் பெற்றால் ஒரு ஆசை எழும் போது, அதனை நிறைவேற்றிக் கொள்ளச் செயலில் இறங்கும் போது நல்லது அடைவோம் என்று நன்மை செய்வான். தீமை வரும் என்று அஞ்சி அதைத் தடுத்துக் கொள்வான். இந்த முறையிலே தான் தற்காலத்திற்கு கல்வி முறை அவசியம். ‘வினையும் பயனும்’ என்ற முறையிலே ஒரு தெளிவான பொறுபுணர்ச்சி ஏற்படுவது இன்று எல்லோருக்கும் அவசியம்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Wednesday 19 December 2012

உணவும், மருந்தும்




உணவும், மருந்தும்

‘நீ சீரணிக்கும் அளவிற்குள்ளாக உணவு உட்கொண்டால் உணவை நீ சீரணிக்கிறாய். அதிகமாக உட்கொண்டால் உணவு உன்னைச்  சிரணிக்கும்.’

எனவே, சுத்தமானதும், எளிமையானதும், சத்து நிறைந்ததுமான உணவு வகை அன்றாடம் நமது உடலுக்குத் தேவை. காரம், புளி, உப்பு, சர்கரை இவற்றையும் மிதமாகக் கொள்ள வேண்டும்.

உணவில் அளவும் தரமும், முறையும் தவறினால், நோய்கள் உண்டாகும். அவ்வப்போது தக்கபடி மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் என்று லேசாக நினைப்பதும் சரியன்று.

மருந்து என்றால் என்ன? மனிதன் ஆற்றும் தவறான செயல்களால் நோய் உண்டாகிறது. அந்நோய்களை சமன் செய்ய, ஏற்ற ஆற்றல் உடலிலேயே இயற்கை அமைந்திருக்கிறது. ஒரு சமயம் உடலில் நோய் தீர்க்கும் ஆற்றல் வலுவற்றதாக இருந்தால், அந்த ஆற்றலை ஊக்கி விட  ஏற்ற பொருட்களே மருந்து ஆகும். உயிர் ஆற்றலுக்கு உந்து சக்தி என்பது வழக்கு.

அவ்வாறான உந்து ஆற்றலுக்குத் துணையாய் உந்தும் ஆற்றலைத்தான் மருந்து என்று கூறிகிறோம். மருவி வந்த மகளை மருமகள் என்பது போல, மருவி வந்த மகனை மருமகன் என்பது போல, மருவி உந்து ஆற்றலை மருந்து என்று வழங்குகிறோம். மருந்துன் மருந்தின் உபயோகம் வேறு வழியின்றி ஒரு குறுகிய காலத்தில் சிறு அளவில் மட்டும் தான் பொருத்தமானது. ஏனெனில் சில மருந்து வகை, ஒரு நோயை குணப்படுத்தி, வேற்றொரு நோயை உண்டுபண்ணக் கூடியதே. இதைத் தவிர்க்க இயற்கையான அறிவின் வழி முன் உண்ட உணவு முற்றிலும் செரிமானமான பின்னரே அடுத்த உணவு கொள்ளலாகும்.



----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்

----------------------------------------------------------------------(தொடரும்)

Tuesday 18 December 2012

சிக்கலும் தீர்வும்.





சிக்கலும் தீர்வும்.

வாழ்க்கைச் சிக்கல்கள் பல காரணங்ங்களால் விளைகின்றன. பெரும்பாலும் தன் அறிவில் உள்ள குறைபாடுகள்தான் வாழ்க்கைச் சிக்கல்கள் விளையக் காரணமாகின்றன. எப்படி எனப் பார்க்கலாம். அறிவின் குறைபாட்டினால் இயற்கை நியதி தெரிவதில்லை. செயல் விளைவுத் தத்துவம் புரிவதில்லை.

தவறு செய்தால் இன்றோ, நாளையோ, அறிவிற்கோ, உடலுக்கோ, துன்பம் விளையும் என்பது தெரிவதில்லை. இத்தகைய அறியாமையை செய்த தவறுகளின் காரணமாகப் பெருக்கிக் கொள்ளும் துன்பங்களே வியாதிகளாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் நம்முன் எழுந்து நிற்கின்றன.

அறிவின் குறைபாட்டால் சமுதாய ஒழுங்கமைப்பு விதிகள் பிரிவதில்லை. பலர் இணைந்த கூட்டுறவு வாழ்வு எனும் சமுதாயத்தில் பராமரிப்புக்கும், காப்புக்கும் மேம்பாட்டுக்குமான விதிமுறைகளை அறியாமல் அல்லது அவமதித்து, அதன் விளைவாகச் சந்திக்கும் துன்பங்கள் தாம் வாழ்க்கைச் சிக்கல்களாக மாறுகின்றன.

பிறப்புக்கும், இறப்புக்கும்  இடையில் உருளும் வாழ்வு எனும் காலக்கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் ‘நான்’ யார் என்று தெரிவதில்லை. என் மூலமென்ன? என் முடிவென்ன? என்பதை விளக்கிக் கொள்வதில்லை. தன்னிலை விளக்கம் பெற வேண்டும் என்று கூடத் தெரிவதில்லை. அதன் விளைவாக, வாழ்வின், பிறவியின் நோக்கமாகிய வீடு பேறு என்ற உன்னதமான லட்சியத்திற்கு இசைவான வகையில் வாழும் முறையை அமைத்துக் கொள்ளாமல், அந்த லட்சியத்திற்கு இடையூறாக, எதிரிடையாக எனென்ன வழிகள் உண்டோ அப்படியெல்லாம் வாழ்வதால் அந்த முரண்பாடே வாழ்க்கைச் சிக்கலாக முளைக்கிறது. தன்னிலை விளக்கம் பெற்று லட்சிய வாழ்வு வாழ்வோம்.

----------------------------------------------------------------------அருள் தந்தை.

வாழ்க வையகம் ------------------------------------வாழ்க வளமுடன்
Karthik raju
3:22 PM (22 hours ago)

to me
Karthik raju has left a new comment on your post "சிக்கலும் தீர்வும்.":

நன்று
தொடருங்கள்



Posted by Karthik raju to மனிதவாழ்க்கை at 19 December 2012 01:52
Kuppu Samy <kuppu6@gmail.com>
1:26 PM (0 minutes ago)

to Karthik
மிக்க மகிழ்ச்சி பார்வையிட்டமைக்கு.
குப்புசாமி.
----------------------------------------------------------------------(தொடரும்)