Thursday 23 May 2013

மனதின் பத்துப் படிகள்.



 
மனதின் பத்துப் படிகள்.
 
உடலை அடக்குவது உயிரின் வேலை. அதனைப் பாதுகாத்து, அணு அடுக்குச் சீர்குலையாமல் தடை வரும் போது, அதை உணரும் போது மனமாக விரியும் போது, உணர்ந்த தடையை நீக்க முயல்வது உயிரின் இரண்டாவது வேலையாகும், தடையால் உணர்ச்சி ஏற்படவே அதனைப் போக்கப் பொருள் அல்லது சூழ்நிலை அல்லது நட்பு வேண்டும்.அப்போது தேவை உருவாகிறது.உணர்ச்சியாக மாறி நிற்பதும் தேவையாக எழுந்து நிற்பதும் உயிர்தான்.
 
தேவை ஏற்படவே அதைச் சமன் செய்ய – முயற்சி தோன்றுகிறது.முயற்சியின் காரணமாகச் செயல் மலர்கிறது.செயலானது இயற்கை ஒழுங்கமைப்பின்படி விளைவு தருகிறது.விளைவை உயிரானது அனுபோகம் ஆகப் பெறுகிறது.அனுபோகத்திலிருந்து இன்ன செயல் செய்தால் இன்ன விளைவு வரும்.அதனால் இன்ன அனுபவத்தைப் பெறலாம் என்ற அனுபவத்தை உயிர் பெறுகிறது.
 
உயிர் மேற்கொள்ளும் ஆராய்ச்சி, அதன்பின் இன்னவிதமான சூழ்நிலையில்  இன்னவிதமாக உணர்ச்சி தோன்றியதனால் இன்னவிமாகச் செயல்படவேண்டும் என்று ஒரு தெளிவினைப் பெறுகிறது. இறுதியாக எல்லாவற்றையும் தொகுத்து ஒரு முடிவினையும் உயிர் செய்து வைத்துக் கொள்கிறது.எனவே, உயிரே உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல் விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்ற பத்துக் கட்டமாக உயர்ந்து படர்ந்து நிற்கிறது.
 
எனவே, உயிரினது படர்க்கை நிலை ஆற்றல் தான் மனம், ஆங்கிலத்தில் (Psychic extension of the life energy is mind) எனலாம். உடல் வரையில் இன்ப துன்ப அனுபோகங்களில் குறுகி நில்லாமல் ஆன்மா பற்றியும், இறைவனைப் பற்றியும் ஆராய உயரும் நிலையில் இந்த மனதையே அறிவு என்கிறோம்.
--------------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம்.-------------------------------------------------வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------(தொடரும்)

Thursday 16 May 2013

சாதனை வழி.



 
சாதனை வழி.
 
இன்றைய உலக சமதாயச் சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்குத் தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும், அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனைப் புகையையும், துன்பங்கள், சிக்கல்கள் இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப் பெற்ற நிறுவனமே உலக சமுதாய சேவா சங்கமும் அதன் செயல் வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்மயோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக வளர்ப்பது சிறந்த தோர் சீர்திருத்தத் திட்ட மாகும்.
 
சிந்தனையை வளர்க்கவும், அறிவிற்கு நுண்மை, கூர்மை, உறுதி, தெளிவு இவற்றையளித்து அமைதியை உருவாக்க வல்ல அகத்தவமுறை இதில் இருக்கிறது.நான் என்ன செய்கிறேன்.இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையுணர்ந்து நல்லன தேர்ந்து செயலாற்றும் பண்பாட்டை வளர்க்க அகத்தாய்வுப் பயிற்சி இருக்கிறது.நோய்களைப் போக்கிக் கொள்ளவும், நோய் வராமல் காக்கவும் ஏற்ற உடல் பயிற்சியும், உடலோம்பும் அறிவுப் பாடல்களும் உள்ளன.
 
விளைவறிந்து செயலாற்றும் விழிப்பு நிலையின் ஒவ்வொரு செயலிலும் இறையுணர்வைப் பெற்று, அறவழி வாழ்வும் ஏற்ற கர்மயோக நெறி நிற்கும் வாழ்க்கை முறையும் இருக்கின்றன. பிறவிப்பயனாகிய அறிவை அறிய இறைநிலையோடு ஒன்று கலந்து பேரின்ப வாழ்வினை அனுபவிக்க ஏற்ற அறிவு விளக்கப் பயிற்சியும், வாழ்வு முறையும் உள்ளன. தன் தகுதியை விளக்கிக் கொண்டும், அதை வளர்த்துக் கொண்டும், தன்னம்பிக்கையோடு வாழ்வை நடத்த அச்சமின்மையும், தகைமையும் வளர்த்துக் கொள்ள ஏற்ற ஆக்க முறை வாழ்க்கை நெறி இருக்கிறது. பொதுவாகவும், சுருக்கமாகவும் சொல்லுமிடத்து மனிதன், மனிதனாக வாழ, ஏற்ற ஒரு சாதனை மனவளக்கலை ஆகும்.
------------------------------------------------------------------------------------------------அருள்தந்தை.
வாழ்க வையகம். ---------------------------------------------------வாழ்க வளமுடன்.