Saturday 5 October 2013

ஊனுடலே வாகனம்.



 
 
ஊனுடலே வாகனம்.
 
நாம் சமுதாயத்தில் ஓர் அங்கம். இந்த உடல் சமுதாயத்தின் சொத்து. அதனைக் கெடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. இந்த உடலுக்குள்ளாக நாம் சமுதாயத்தில் கடன் பட்டிருக்கிறோம். மற்றம் அன்றாட அனுபோகப் பொருட்களையும் அதனிடமிருந்து பெற்று  அனுபவித்து வருகிறோம். இந்தக் கடனை திருப்பிப் தரும் வழியே கடமை எனப்படுகிறது.
 
அவர்களது உடலாற்றலையும், அறிவாற்றலையும் அந்தந்த நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றபடி குறைவில்லாமல் சமுதாய நலத்திற்கு அர்ப்பணமாகச் செலவிடல் தான் கடமை. உடலைக் கொண்டு தான் இந்தக் கடமையை ஆற்ற வேண்டும்.
 
உடல் நலக்குறைவு ஏற்படும் போதும், நலிவுற்ற போதும் சமுதாயம் நம்மை கவனிக்க வேண்டி வந்து விடுகிறது. இதனால் சமுதாயத்திற்கு வர வேண்டிய வரவும் நின்று போய் மருந்தென்றும் உப சரணை என்றும் நம்மால் சமுதாயத்திற்கு இழப்பு உண்டாகிறது. எனவே தான், கடமையை வகைப்படுத்தும் போது உடல், குடும்பம், சுற்றம் ,ஊர், உலகம் என்று உடல் கடைமைகளை மற்றவற்றின் முன்னால் வைக்கப் பட்டது.
 
இனி ஆன்மீக நோக்கில் உடல் நலத்தின் அவசியத்தை ஆராயலாம். இதுவரை மனிதனிடம் ஏற்பட்டுள்ள களங்கங்கள், பாவப்பதிவுகள் நீங்கினால் தான் உயிருக்கு வீடு பேறு, விடுதலை கிடைக்கும். பாவப்பதிவுகள் எப்படிப்போகும்? உடலை எடுத்தால் தான்  அந்தப் பாவம் பதிவுகள் துன்பமாக அனுபோகமாகி நீங்கும் அல்லது யோக சாதனைகள் மூலம் நீக்கிக் கொள்ளலாம். அதற்குத்தான் இந்த உடலை உயிர் எடுத்து வந்தது. உயிர் தன் மூலத்தை அறிந்து கொள்ள எடுக்கின்ற முயற்சிக்கும் இந்த உடல் தேவைப்படுகிறது.  ஆகவே உடலை உயர்வாகக் கருதி சீர் கேடு அடையாமல் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் ஆன்மீகப் பயணம் தடைபடாமல் இருக்கும்.
------------------------------------------------------------------------------------------அருள் தந்தை.
வாழ்க வையகம் -----------------------------------------------------------வாழ்க வளமுடன். 
-------------------------------------------------------------------------------------(தொடரும்)